அறிஞர் அண்ணா வகுத்த குறிக்கோளுக்கு ஏற்ப தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நெருங்கிய திராவிட கலாச்சார கூட்டுறவு நிலவப் பாடுபடுவது; அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது என்பது தி.மு.கழகத்தின் குறிக்கோள் ஆகும்.
அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவற்றுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் – மத்தியில் கூட்டாட்சியும் (Autonomy for States & Federation at Center) உருவாகிடவும் தொண்டாற்றுவது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடு.