header_right
பட்ஜெட் வெறும் டிரெய்லர் தான் என்கிறார் பிரதமர் மோடி; வெறும் டிரெய்லர் தயாரிக்கவே இவருக்கு நான்கரை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது - கழகத் தலைவர்

பதிவு: 06 Feb 2019, 16:14:17 மணி

“பட்ஜெட் வெறும் டிரெய்லர் தான் என்கிறார் பிரதமர் மோடி; வெறும் டிரெய்லர் தயாரிக்கவே இவருக்கு நான்கரை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்றால், மக்களுக்கான திட்டங்களை தீட்டுவதற்கும், அதனைச் செயல்படுத்துவதற்கும் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகும்?” கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்

இன்று (04-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சாத்தூர் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

பின்னர் கழகத் தலைவர் அவர்கள் சத்திரப்பட்டி ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:

அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். என்னுடைய அழைப்பை ஏற்று நீங்கள் எல்லோரும் வந்ததற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம். எதற்காக இந்த ஊராட்சி சபை கூட்டப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என நாங்கள் நினைக்கிறோமோ இல்லையோ, நீங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறீர்கள். அந்த உணர்வோடு - எழுச்சியோடு – மகிழ்ச்சியோடு – நம்பிக்கையோடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் மீண்டும் வருக! வருக! என்று வரவேற்கின்றேன்.

இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற நிலைமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். மத்தியில் பாசிச பா.ஜக அரசும், மாநிலத்தில் கமிசன் – கரப்சன் – கலெக்சன் அரசும் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த சட்டமன்றத் தொகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக எம்.எல்.ஏ இல்லாமல் இருப்பதால், உங்களின் குறைகளை யாரிடம் சொல்வதென்று தெரியாமல் இருந்தீர்கள். முக்கியமாக உங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு எவ்வாறு காண்பது என்பது தெரியாமல் சிக்கித் தவிக்கிறீர்கள். அதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் பிறக்க வேண்டும்.

குறிப்பாக, இங்கே என்னிடத்திலே குறைகளை எடுத்துரைத்தவர்கள் பட்டாசு தொழில் பற்றியும், குடிநீர் பிரச்னை பற்றியும் சொன்னீர்கள். நாங்கள் சட்டமன்றத்தில் பட்டாசு தொழிலில் ஏற்படும் பிரச்னைகளை எடுத்துச் சொன்னோம். ஆனால் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. மத்திய அரசுக்கு இதனை முறையாக எடுத்துச் சொல்லி, உங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றியிருக்க வேண்டும். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டு கொடுத்திருக்க வேண்டும் அதுவும் செய்யவில்லை.

அதேபோல், விவசாயிகளைப் பொறுத்தவரையில் இந்தத் தொகுதியில் நான் கேள்விப்பட்டது, அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகம் இருந்து கொண்டிருப்பதால் மக்காச்சோளம், நெல் சிறுதானிய பயிர்கள் மற்றும் கரும்பு, பருத்தி போன்றவை கொடுமையாக பாதிப்படைந்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது என்பதை பற்றியும் கேள்விப்பட்டோம். இதனை பல முறை கோரிக்கை மனுக்களாக கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

விரைவில் இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 12,617. அங்கெல்லாம் நம்முடைய கட்சிகளின் நிர்வாகிகள் சென்று ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதெல்லாம் ஏதோ தி.மு.க புதிதாய் நடத்துகிறது என நினைத்து விடக்கூடாது. தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினோம். உள்ளாட்சிகளில் மக்கள் குறைகளை போக்க பிரதிநிதிகள் இருந்தார்கள். அதனால் அப்போது இந்தக் கூட்டங்களை நடத்தி உங்கள் குறைகளை கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால், இப்போது அப்படி இல்லை. இந்த அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால் இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகள் உருக்குலைந்து போயிருக்கிறது.

பொதுவாக, குடிநீர் பிரச்னை, சுகாதார பிரச்னை, அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், சாலை சீரமைப்பு வசதிகள் அதேபோல், முதியோர்களுக்கு வழங்கப்படக்கூடிய உதவித்தொகை சரிவர கிடைப்பதில்லை என தெரிவித்தீர்கள். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது விதிமுறை இல்லாமல். அதேசமயம், முறையாக முதியவர்கள் அத்துனை பேருக்கும் உதவித்தொகை கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அதற்கு மாறாக இப்பொழுது ஓரவஞ்சனையோடு அ.தி.மு.க கட்சிக்காரர்களுக்கு மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்கக்கூடிய கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் 100 நாள் வேலைத் திட்டம் என்பது தி.மு.க ஆட்சி காலத்தில் முறையாக நடைபெற்றது. 100 நாட்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தோம். ஆனால், இன்றைக்கு அதிலும் குளறுபடிகள் குழப்பங்கள் அதுவும் மக்களுக்கு முறையாக முழுமையாக சென்றடையவில்லை.

மோடி ஒரு பம்மாத்து வேலை செய்யத் துவங்கியிருக்கின்றார். அவரே சொல்லி இருக்கின்றார் இந்த பட்ஜெட் என்பது ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப் பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள். அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். ஆகவே, நாடே இன்றைக்கு ஒரு சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.

பெண்கள், தன்மானத்தோடு வாழ வேண்டும். சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும் தன்னம்பிக்கையை பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவை தலைவர் கலைஞர் அவர்கள் 89 இல் ஆட்சிக்கு வந்தபொழுது ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அது இன்றைக்கு எப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே, நாட்டைப் பற்றியும் கவலைப்படவில்லை, மாநகராட்சியை பற்றியும் கவலைப்படவில்லை, நகராட்சியும், கிராமத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை அப்படிப்பட்ட ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

எந்த வேலை எடுத்துக்கொண்டாலும் கமிஷன் – கலெக்சன் - கரெப்சன், பொதுப்பணித்துறை எடுத்துக்கொண்டால் Percentage தான். அதேபோல் காவல் துறை, கல்வித்துறை என எல்லாத் துறைகளிலும் கொள்ளையடிக்கக்கூடிய ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு கொடுமை என்னவென்று கேட்டீர்களென்றால், கொலைக்கு உடந்தையாக இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கின்றோம். இன்றைய முதலமைச்சர் பார்த்தீர்கள் என்றால் ஒரு கொலைப்பழி சுமத்தப்பட்ட முதல்வராக இருந்து கொண்டிருக்கின்றார். அவர் விரைவில் சிறைக்குச் செல்லவிருக்கிறார்.

ஆகவே, இந்த அடிமை ஆட்சிக்கும், இதற்கு துணை போகின்ற பாசிச ஆட்சிக்கும் விரைவில் மக்களாகிய நீங்கள் பாடம் புகட்ட வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு, விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்!

இவ்வாறு அவர் பேசினார்.