New - DetailPage - DMK
header_right
“விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தி.மு.கழகம் முழு ஆதரவளிப்பதோடு, சட்டமன்றத்தில் நிச்சயம் இதுகுறித்து குரல் எழுப்பும்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேச்சு

பதிவு: 28 Dec 2018, 02:26:26 மணி

இன்று (27-12-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை மூலக்கரை பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அவர்களிடத்தில், கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:

உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். விவசாய நிலங்களில் அமைக்கப்படும் உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகளுடைய கூட்டியக்கமாக இந்தப் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து 5 நாட்களாக நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள். வெறும் போராட்டம் மட்டும் நடத்தினால் இந்த அரசு செவி சாய்க்காது என்று கருதி குறிப்பிட்ட சில தாய்மார்களும், தோழர்களும் தங்களை வருத்திக் கொள்ளக்கூடிய உண்ணா நோன்பையும் நீங்கள் தொடர்ந்து இங்கே நடத்தக்கூடிய ஒரு சூழ்நிலை வந்திருக்கின்றது. அதற்காக, நான் உள்ளபடியே வேதனைப்படுகின்றேன். ஏற்கனவே, இந்த செய்தியைக் கேள்விப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கையை நான் வெளியிட்டு அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும், இதற்கு ஒரு பரிகாரத்தை காண வேண்டும், போராட்டக் குழுவினரை அழைத்து அரசு பேசிட வேண்டும் என்று நான் தொடக்கத்திலிருந்து கோரிக்கை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

நான் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளும் இந்தக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கின்றது, ஆகவே, நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது இந்த உயர் மின்கோபுரங்களை யாரிடத்திலும் கலந்து பேசாமல் ஒரு கலந்தாலோனைக் கூட்டம் கூட நடத்தாமல் ஒரு சர்வாதிகாரத் தன்மையோடு, இந்தப் பணியை இன்றைக்கு மத்திய - மாநில அரசின் துணையோடு நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள். இங்கே உங்களை எல்லாம் சந்தித்த நேரத்தில் கூட இங்கிருக்கக்கூடிய நிர்வாகிகள் என்னிடத்தில் சொன்னது, இதுவரையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை, எந்த உயர் அதிகாரிகளும் பார்க்கவில்லை, மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆட்சித் தலைவர் கூட எங்களை வந்து இன்னும் சந்திக்கவில்லை என்று வேதனையோடு என்னிடத்திலே சொன்னார். ஒரு சர்வாதிகார போக்கில் இந்த ஆட்சி இன்றைக்கு தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

சென்னையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை ஒரு பதினைந்து நாட்களாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களையும் நான் சென்று பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவர்களையும் அரசு சார்பில் அழைத்துப் பேசவில்லை. அதேபோல், இங்கிருக்கக்கூடிய உங்களையும் அழைத்துப் பேசாத நிலையில் தான் இந்த அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது.

வருகின்ற 2-ம் தேதி சட்டமன்றம் கூடவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. சட்டமன்றம் கூடும் நேரத்தில் நிச்சயமாக எதிர்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் உங்களுக்காக நான் குரல் கொடுக்க காத்திருக்கின்றேன் – உங்கள் பிரச்சினையை நான் சட்டமன்றத்தில் பேசுவதென முடிவு செய்திருக்கின்றேன். சட்டமன்றத்தில் குரல் கொடுப்பது மட்டுமல்ல உங்களுடைய போராட்டத்திற்கு துணை நின்று உங்கள் போராட்டம் வெற்றி பெற நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் உங்கள் பின்னால் இருக்கின்றது என்ற அந்த நம்பிக்கையோடு நீங்கள் இருங்கள். நான்கூட உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய தாய்மார்களை சந்தித்த நேரத்தில் சொன்னேன். நீங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள், போராட்டத்தை நடந்துங்கள் ஆனால், உண்ணா நோன்பு என்ற போராட்டத்தை ஏன் கைவிடக்கூடாது என்று நான் கேட்ட போது, இல்லை – இல்லை. எங்களுக்கு பிரச்சனை தான் முக்கியம்.

அதில் எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை என்று சொன்னது உள்ளபடியே பாராட்டிற்குரியதாக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு வேதனையோடு இருக்கின்றார்கள் என்பதை எண்ணிப்பார்க்கின்ற போது நான் உள்ளபடியே வேதனைப்படுகின்றேன். இதற்கொரு முடிவு கட்டுவதற்கு சட்டமன்றத்திலே நிச்சயமாக குரல் எழுப்புவோம் என்பதை மாத்திரம் சொல்லி. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய உங்களின் கோரிக்கை வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து இந்தளவில் நான் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.