New - DMK
header_right
மதவெறி பிடித்து நாட்டின் பொருளாதாரத்தின் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும் பா.ஜ.க ஆட்சியை அப்புறப்படுத்த ஒன்று கூடுவோம்

பதிவு: 12 Dec 2018, 11:40:44 மணி

“மதவெறி பிடித்து நாட்டின் பொருளாதாரத்தின் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க ஆட்சியை அப்புறப்படுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி செயல்படுவோம்”

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்10-12-2018 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர்,சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

இந்திய நாட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் நிலவரங்களைப் பற்றி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அலசி, ஆராயப்பட்டது. குறிப்பாக, விவசாயிகளினுடைய நலன் மீது அக்கறை இல்லாத ஒரு அரசாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் இவர்கள் அத்தனை பேரும் இன்றைக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதைப் பற்றி விவாதித்திருக்கிறோம்.

விரிவான பொருளாதார வளர்ச்சிப் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஒரு கூட்டு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற நிலையில் பேசப்பட்டிருக்கிறது. எழுத்துரிமை, பேச்சுரிமை அதற்குரிய சுதந்திரம் எல்லாம் இந்த மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக பி.ஜே.பி ஆட்சியை பொருத்தவரையில் பி.ஜே.பி ஆட்சியாக மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாகவும் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்று மாலையிலே கூட கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி வந்தது, ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர் ராஜினாமா செய்திருப்பதாக. ஏற்கனவே, இதே மோடி ஆட்சியில், அதாவது இன்று ராஜினாமா செய்து இருப்பதோடு சேர்த்து இரண்டு ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள். ஏற்கனவே தமிழகத்தைச் சார்ந்த ரகுராம் ராஜன் ராஜினாமா செய்தது நாட்டிற்கு தெரியும்.

அதைத் தொடர்ந்து இன்று உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆகவே, இந்த மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்களே ராஜினாமா செய்யக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த ஆட்சியினுடைய நிலையைப் பற்றி நாடு நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே, நாட்டினுடைய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, குறைந்தபட்ச செயல் திட்டத்தை (Common minimum programme) உருவாக்க வேண்டுமென்று இந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நான் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறேன். ஒட்டுமொத்தமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கக்கூடிய சிறுசிறு பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மத்தியிலே ஒரு பாசிச ஆட்சி மதவெறி பிடித்து இருக்கக்கூடிய ஒரு ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு மெகா கூட்டணி அமைத்து நாம் போராட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் என்னுடைய கருத்துக்களை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கழகத் தலைவர் கூறினார்.