header_right
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்குவது தொடரும் - கழக தலைவர்

பதிவு: 23 Nov 2018, 12:22:35 மணி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் தி.மு.க சார்பில் ஏற்கனவே 10 கோடி ரூபாய் அளவிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடருமா? என்று கேள்வி எழுப்பினார் அதற்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "ஏற்கனவே 1 கோடி ரூபாய் தி.மு.க அறக்கட்டளையின் சார்பிலே வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.கழக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஊதியத்தையும் வழங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஏறக்குறைய 4 கோடி ரூபாய் மதிப்புள்ள, நிவாரணப் பொருட்கள் அந்த பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பகுதிகளுக்கு 100 லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நிவாரணப் பணிகள் தொடரும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே ஹெலிகாப்டரில் சென்று முழுமையாக கணக்கெடுத்து விட்டேன் என்று அறிவுப்பூர்வமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் தான் பிரதமரை சந்தித்து 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரண நிதி தேவை என்று சொல்லி விட்டு வந்திருக்கிறார். முன்கூட்டியே 1500 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என்று அந்தக் கோரிக்கையை எடுத்து வைத்துவிட்டு வந்திருக்கிறார். மத்திய அரசின் சார்பில் ஆய்வு செய்வதற்கு குழு அனுப்பப்படுவதாகவும் செய்தி வந்திருக்கிறது. ஆகவே, இவைகளெல்லாம் செய்திகளாகத் தான் இருக்கிறது. இது செயல்பாட்டிற்கு வர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.