Kalaignar-karunanithi - DMK
header_right
Generic placeholder image

மு. கருணாநிதி

tab

பிறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி பாய்ந்து கரை உயர்த்திய `திருக்கோளிலி' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, புலவரும் - இசைக்கலைஞருமான திரு. முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், அவர்களின் பெயர் பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு. 

 

இளமைப்பருவம்

திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக் கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். 1938-ம் ஆண்டு, கலைஞர் ஏழாம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.  

விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.

 

tab

கலைஞரின் மன உறுதி:

“பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. பாதி தூரம் கடந்துவிட்டோம். ‘என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்’ என்றார் தென்னன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதிதான் நீந்த வேண்டும்’ என்று கூறினேன். இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எதையும் பாதியில் விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல், அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை” என்று தன்னுடைய இளம்பருவ வாழ்க்கை குறித்து தனது நேர்காணல் ஒன்றில் விவரித்திருக்கிறார் கலைஞர்.

 

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்:

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்துகொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் மாணவர்களை ஒன்றிணைத்து திருவாரூர் தெருக்களில் ஊர்வலம் நடத்தினார் 

“வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!

வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டி திருப்பிடுவோம்" 

என்று முழக்கமிட்டபடி சென்ற கலைஞர், மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, இந்தி ஆசிரியரிடம் அடி வாங்கும் நிலை ஏற்பட்டது. அடி வாங்கினாலும் தமிழ் ஆர்வம் குறையாத கலைஞர், தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

 

தமிழ்நாடு மாணவர் மன்றம்:

பின்னர், பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்துக்கு மாணவர்களைத் திரட்டுவதற்காக, 1939-ம் ஆண்டு, தனது 15-வது வயதில், ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.

17 வயதில், ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.  கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம், திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோர் இந்த அணியில் இணைந்து செயல்பட்டனர்.

 

அரசியல் ஈர்ப்பு:

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நீதிக்கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் இந்தி எதிர்ப்பு மேடைப்பேச்சு, கலைஞரைப் பெரிதும் ஈர்த்தது.‌ அதன் தாக்கத்தில் பள்ளி மற்றும் அதற்கு பின்பான இளமைப் பருவத்திலும் தீவிர பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். எழுத்து, பேச்சு, நாடகம் என்று பல்வேறு துறைகளிலும் தன்னை பட்டை தீட்டிக்கொண்ட கலைஞரின் திறமை மண்மூடிய விதையாக வேர்பிடித்து தழைத்தது.

 
tab

முரசொலி நாளிதழ்

1942-ம் ஆண்டு, அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ ஏட்டில், கலைஞர் எழுதிய ‘இளமைப்பலி’ என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவை பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக சென்றிருந்த அவர், கலைஞரை அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்த கலைஞர், முன்பைவிடத் தீவிரமாக செயல்படத் தொடங்கினார்.

 

துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் பிரசாரம் செய்து வந்த கலைஞர், தன் பரப்புரைக்கென ஒரு அச்சிதழ் தொடங்கும் தேவையை உணர்ந்து, 1942 ஆகஸ்ட் மாதம் ‘முரசொலி’ இதழைத் தொடங்கினார். தொடக்கத்தில் வார இதழாக வெளிவந்த முரசொலி, 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளேடாக மாற்றப்பட்டது. அதில், ‘சேரன்’, ‘மறவன் குரல்’ போன்ற பெயர்களில் அனல் தெரிக்கும் கட்டுரைகளை கலைஞர் எழுதினார். இதுவே, பின்னர் உடன்பிறப்புகளுக்கான கடிதமாக மாறியது. உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள், திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

“கடிதங்கள் மூலம் கருத்துகளைச் சொல்லி, அதைப் படிக்கும் ஒவ்வொருவரையும் அந்தக் கருத்துகளோடு தனிப்பட்ட முறையில் ஈடுபாடு கொள்ளச்செய்வதில் நேரு, மு.வரதராசனார் போன்ற அறிஞர்கள் முன்னோடிகள். அண்ணா இருந்தபோது ‘தம்பிக்கு...’ என விளித்து, வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதுவார். அப்போதே நான் ‘அன்பு நண்பா...’ என்று அழைக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட 1965-ல் இருந்து உடன்பிறப்புக் கடிதங்கள் எழுதி வந்திருக்கிறேன். 1968-ல் இருந்து எழுதப்பட்ட எனது உடன்பிறப்புக் கடிதங்கள் புத்தமாகத் தொகுக்கப்பட்டு, இதுவரை பன்னிரண்டு தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. ‘நண்பா’ என்ற வார்த்தையிலிருந்து ‘உடன்பிறப்பே’ என்ற வார்த்தைக்கு மாறியதன் காரணம், அது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை என்பதால்தான். மற்றபடி, பாச உணர்வோடு கழகத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பிணைப்புப் பணியை, இந்த உடன்பிறப்புக் கடிதங்கள் செய்கின்றன என்றால், அது மிகையில்லை.” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் கலைஞர்.

"தவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை! முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை! 
           - கலைஞர் மு. கருணாநிதி


tab
tab

திராவிடர் கழகம்:

1944ம் ஆண்டு நீதிக்கட்சியானது, பெரியாரின் தலைமையில், அண்ணா அவர்களின் தீர்மானத்தின் படி, “திராவிடர் கழகம்” என்ற பெயர் மாற்றத்துடன் செயல்பட தொடங்கியது. அதே ஆண்டு, கலைஞர் அவர்கள் “திராவிட நடிகர் கழகம்” என்ற நாடகக்குழு ஒன்றை துவக்கி, தான் எழுதிய நாடகங்களை அரங்கேற்றி அதில் நடித்தும் வந்தார்

1945ம் ஆண்டு, புதுச்சேரியில் வெற்றிகரமாக நடைபெற்று வந்த திராவிடர் நாடகக் கழகம், திராவிடர் கழக தலைவர்களை அழைத்து மாநாடு நடத்திட திட்டமிட்டு, பெரியார், அண்ணா மற்றும் அழகிரிசாமி அவர்களை அழைத்தனர். சிறப்பாக நடந்த மாநாட்டிற்கு பின்பு, கலைஞர் மற்றும் அமைப்பாளர்கள் எதிர்கட்சியினரால் பயங்கரமாக தாக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கண்ட பெரியார், கலைஞர் அவர்களை தன்னுடன் ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று “குடியரசு” பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பெறுப்பேற்க வைத்தார்.

பெரியாரின் நேரடிப்பார்வையில் தீவிர அரசியலில் ஈடுபட்ட கலைஞர், குடியரசு இதழில் தொடர்ச்சியாக கட்டுரைகள் தீட்டி, திராவிட அரசியலின் வளர்ச்சிக்கு பங்களித்தார். திராவிடர் கழகத்துக்கென கருப்பு நிறத்தின் நடுவே சிவப்பு வட்டம் என்ற அமைப்பில் தனிக் கொடி உருவாக்கப்பட்டது. கொடி உருவாக்கத்தின்போது சிவப்பு வண்ணம் இல்லாததால், பெரியாரின் குடியரசு இதழில் வேலை பார்த்து வந்த கலைஞர், குண்டூசியால் தன் விரலில் குத்திக்கொண்டு தன்னுடைய ரத்தத்தை எடுத்துச் சிவப்புப் பொட்டு வைத்தார்.

 

tab

இந்தி எதிர்ப்பு:

1948-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள், மீண்டும் இந்தியை கட்டாயப் பாடமாக்கி காங்கிரஸ் அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார், அண்ணா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். 1948, செப்டர்ம்பர் 15-ம் நாள் திருவாரூரில் மறியல் நடைபெற்ற அன்று, கலைஞருக்கும் தயாளு அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது. அன்று, திருமண நாளென்றும் பாராமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார் கலைஞர்.

 

தேர்தல் அரசியலில் பயணித்தால் மட்டுமே சட்டங்கள் இயற்றி, மக்களுக்குத் தேவையானை பணிகளை செய்ய முடியும் என்பதற்காக, திராவிடர் கழகத்திலிருந்து

விலகிய அண்ணா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் 1949-ம் ஆண்டு, செப்டம்பர் 17-ம் நாள் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினர். கழகத்தின் பொதுச் செயலாளராக அறிஞர் அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைஞர், கொள்கைப் பரப்புக்குழுவின் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்லக்குடி போராட்டம்:

கல்லக்குடி களம்: கலைஞர் கருணாநிதியின் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றக்கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை ஏற்க மறுத்ததை கண்டித்து கலைஞர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ரயில் மறியலில் ஈடுபட்டார். மும்முனைப் போராட்டத்தை மிருகத்தனமாக அடக்கிய போலீசார், கழக தொண்டர்கள் கேசவன், நடராஜன் ஆகிய இருவரை சுட்டுக் கொன்றனர். தவிர தமிழகம் முழுவதும் மேலும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மும்முனைப் போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. 5000 பேர் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். கலைஞர் கருணாநிதி 6 மாத காலம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

tab

திமுகவின் வரலாற்றில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. திமுகவின் மும்முனைப் போராட்டம் அடுத்த ஆண்டும் தொடர்ந்து தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது

62 நாள் தனிமைச் சிறை:

1965-ம் ஆண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கலைஞரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த காங்கிரஸ் அரசு, அவரை பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தது. 62 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு கலைஞர் விடுதலை செய்யப்பட்டார்.

tab

சட்டமன்றத்தில் கலைஞர்

1957-ம் ஆண்டு, முதல்முதலில் குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது அவருக்கு 33 வயது.

கலைஞரின் முதல் சட்டமன்ற உரை, அனைவராலும் கவனிக்கப்பட்டது. தனது முதல் உரையில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசிய கலைஞர், பின்னர் இதற்காக 20 நாட்கள் போராட்டம் நடத்தி, பிரச்சனைக்கும் தீர்வு கண்டார். கலைஞர் முதன்முறை சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தி அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு.கிருஷ்ணாராவ், ஒரு காகிதத்தில், ‘Very Good Speech’ என்று எழுதி கொடுத்தார்.

இரண்டாவது முறையாக, 1962 சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சட்டப் பேரவை விவாதங்களில், எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடியவர் கலைஞர். ஒருமுறை, “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று கேள்வியெழுப்பிய கலைஞரைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” எனக் கேட்டார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. அதற்கு, “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள்? வாதாடுபவர்களும்தானே போகவேண்டும்?” என்று பதிலடி கொடுத்தார் கலைஞர்.

1967 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், முதல்முதலாக ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அப்போது, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அண்ணா அமைச்சரவையில், பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் கலைஞர். 1957ல் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த கலைஞர் தன் இறுதிவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

tab

முதலமைச்சர்

1969-ம் ஆண்டு ஃபிப்ரவரி 3-ம் நாள், உடல்நலக் குறைவு காரணமாக, பேரறிஞர் அண்ணா இயற்கை எய்தினார். இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் கலைஞர். கலைஞருக்கு அப்போது 45 வயது. இதே ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் கலைஞர் தேர்வு செய்யப்பட்டார்.

1971-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தைவிட, சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கலைஞர் பெற்ற வாக்குகள் 63,334.

தேர்தலில் தோல்வியைத் தழுவாதவர்

1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம் தொகுதியிலும் 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2016 தேர்தலில், தன்னை எதிர்த்து நின்ற அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்தை, 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசமாகும். தனது வாழ்நாளில், 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட கலைஞர், ஒருமுறைகூட தோல்வியைத் தழுவியதில்லை.

ஆண்டு தொகுதி முடிவு
1957 குளித்தலை வெற்றி
1962 தஞ்சாவூர் வெற்றி
1967 சைதாப்பேட்டை வெற்றி
1971 சைதாப்பேட்டை வெற்றி
1977 அண்ணா நகர் வெற்றி
1980 அண்ணா நகர் வெற்றி
1989 துறைமுகம் வெற்றி
1991 துறைமுகம் வெற்றி
1996 சேப்பாக்கம் வெற்றி
2001 சேப்பாக்கம் வெற்றி
2006 சேப்பாக்கம் வெற்றி
2011 திருவாரூர் வெற்றி
2016 திருவாரூர் வெற்றி
tab

பதவி விலகல் – பதவி நீக்கம்

1983-ல் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, 1986-ம் அண்டு டிசம்பர் மாதம், 10 தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இருமுறை ஆட்சிக் கலைப்பு

1975, ஜூன் 25 நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976, ஜனவரி 31-ம் தேதி, கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடப்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி. அதே நாளன்று, 25,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.

திமுக, ஸ்தாபன காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், சோஷலிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் எனப் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டின் அனைத்து மத்தியச் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்கள். இந்தச் சிறைகளிலேயே சென்னை மத்தியச் சிறை சித்திரவதைக் கூடமாக மாறியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, எம்.ஆர்.ராதா, ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு எனப் பலரும் சிறைச்சாலையில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு, சிறையிலேயே மாண்டார். நெருக்கடி நிலையால், கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிகம் பாதிக்கப்பட்டது.

1956-ம் ஆண்டு முதல், இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கலைஞர், 23-8-1990 அன்று, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதையடுத்து, இந்திய அரசின் ரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்ததாகவும், போராளிகளுக்கு அடைக்கலம் அளித்து அவர்களை கட்டுப்படுத்தத் தவறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம், கழக ஆட்சி இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது.

tab

இலக்கிய ஆளுமை

திரைப்படம், நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என அனைத்து இலக்கியத் தளங்களிலும் இயங்கியவர் தலைவர் கலைஞர்.

கலைஞர் எழுதிய நூல்கள்

‘புதையல்’, ‘வான்கோழி’. ‘சுருளிமலை’, ‘ஒரு மரம் பூத்தது’, ‘ஒரே ரத்தம்’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பாயும்புலி பண்டாரக வன்னியன்’, ‘பொன்னர் சங்கர்’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார் கலைஞர். இவற்றுள், ‘தென்பாண்டிச் சிங்கம்’ நாவல், 1989-ம் ஆண்டுக்கான தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘ராஜராஜன்’ விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘நளாயினி’, ‘பழக்கூடை’, ‘பதினாறு கதையினிலே’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் கலைஞர்.

‘குறளோவியம்’

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

178 நூல்கள்

‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.

‘நெஞ்சுக்கு நீதி’

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை ஆறு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.

நாடகங்கள்

கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அறங்கேற்றம் செய்யப்பட்டது. ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’ உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர்.

‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதிய கலைஞர், அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார். 1957-ம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக, ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார். கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். கலைஞர் எழுதிய, ‘தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, நடிகவேள் இந்தப் பட்டத்தை வழங்கினார்.

tab

திரைப்படங்கள்

1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படம்தான், கலைஞர் முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம். எம்.ஜி.ஆர் நாயகன் வேடம் ஏற்று நடித்த முதல் திரைப்படமும் ‘ராஜகுமாரி’தான்.

1950-ம் ஆண்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் 500 ரூபாய் ஊதியத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியில் சேர்ந்த கலைஞர், அங்கு சில திரைப்படங்களில் பணியாற்றினார்.

1952-ல், கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழகத்தின் புகழ்பெற்ற நடிகராக சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தியதும் இந்தப் படம்தான்.

‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற சமூக நோக்கில் அமைந்த கூர்மையான வசனங்கள், திரைப்படத் துறையை புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது.

1950-களிலில் இருந்து 1970-கள்வரை, தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவரும் தலைவர் கலைஞர்தான். சிவாஜிக்கு ‘பராசக்தி, மனோகரா’வும், எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரி குமாரி’, ‘மலைக்கள்ளன்’ ஆகியவையும் திருப்புமுனையாக அமைந்தன.

கலைஞர் கதை - வசனத்தில், மொத்தம் 9 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். ஆரம்பகாலங்களில், கலைஞரை ‘ஆண்டவரே’ என்று அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.

கதை - வசனம் எழுதிய திரைப்படங்கள்

படம் ஆண்டு
இராஜகுமாரி 1947
தேவகி, மணமகள்  1951
பராசக்தி, பணம்  1952
ராஜா ராணி  1956
குறவஞ்சி, எல்லாரும் இந்நாட்டு மன்னர்  1960
அவன் பித்தனா?, மணிமகுடம், மறக்க முடியுமா   1966
பூக்காரி  1973
காலம் பதில் சொல்லும்  1980
குலக்கொழுந்து, மாடி வீட்டு ஏழை, தூக்கு மேடை  1981
இது எங்க நாடு  1983
திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள்,  குற்றவாளிகள் 1984
பாலைவன ரோஜாக்கள், காகித ஓடம் 1986
மக்கள் ஆணையிட்டால், பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள் 1988
தென்றல் சுடும், நியாய தாராசு, பொறுத்தது போதும், பாசமழை 1989
காவலுக்குக் கெட்டிக்காரன்  1990
மதுரை மீனாட்சி  1993
புதிய பராசக்தி 1996
மண்ணின் மைந்தன் 2005
பெண் சிங்கம், உளியின் ஒசை 2010
இளைஞன்  2011
பாச கிளிகள் 2016

 

திரைப்பாடல்கள்:

ஊருக்கு உழைப்பவன்டி - மந்திரிகுமாரி, இல்வாழ்வினிலே ஒளி.. - பராசக்தி, பூமாலை நீயே - பராசக்தி, பேசும் யாழே பெண்மானே - நாம், மணிப்புறா புது மணிப்புறா - ராஜா ராணி, பூனை கண்ணை மூடி - ராஜா ராணி, ஆயர்பாடி கண்ணா நீ - ரங்கோன் ராதா, பொதுநலம் என்றம் - ரங்கோன் ராதா, அலையிருக்குது கடலிலே - குறவஞ்சி, வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சித்தலைவன், ஒருவனுக்கு ஒருத்தி என்ற - பூம்புகார், கன்னம் கன்னம் - பூமாலை, காகித ஓடம் - மறக்கமுடியுமா, ஒண்ணு கொடுத்தா - மறக்கமுடியுமா, நெஞ்சுக்கு நீதியும் - நெஞ்சுக்கு நீதி என பல திரைப் பாடல்களையும் கலைஞர் எழுதியிருக்கிறார்.

பொன்னர் சங்கர்:

கலைஞர் எழுதிய ‘பொன்னர் சங்கர்’ என்ற நாவல், 2011-ம் ஆண்டு, அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளியானது.

1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படம் தொடங்கி, 2011-ல் வெளியான ‘பொன்னர் - சங்கர்’வரை, சுமார் 64 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர் தலைவர் கலைஞர்.

92-வது வயது வசனகர்த்தா

கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தனது 92-வது வயதிலும் வசனம் எழுதியவர் கலைஞர்.

 

tab

ஓய்வு:

2016, அக்டோபர் மாதம் தலைவர் கலைஞரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டைத் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு, உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், 2018 ஜூலை 18-ம் நாள், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரது கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த, ‘டிரக்கியோஸ்டமி’ என்ற செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது. ஜூலை 28-ம் நாள், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட கலைஞர், ஆகஸ்ட் 7-ம் நாள் மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

இறப்புக்கு பிறகும் இட ஒதுக்கீடு போராட்டம்

நீதிக்கட்சி காலம் முதற்கொண்டு, தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும், இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்காகவும் எத்தனையோ போராட்டங்களில் ஈடுபட்டவர் கலைஞர். இந்தப் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக, இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தவர். மக்களுக்காகப் போராடி, பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர்.

“அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா

என்று கண்ணீர் மல்க இறங்கற்பா எழுதினார் கலைஞர்.

அண்ணாவின் அருகில் உறங்கவேண்டும் என்பது கலைஞரின் கனவுகளில் ஒன்றாக இருந்தது. இதை நிறைவேற்றும் முகமாக, பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்கக் கோரி, தமிழக அரசை நேரில் சந்தித்து முறையிட்டார்ர்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க அ.தி.மு.க அரசு மறுத்துவிட்டது.

தகவல் அறிந்த தி.மு.க உடன்பிறப்புகள், கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இட ஒதுக்கீடு கேட்டுத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“இறந்த பிறகும் இட ஒதுக்கீடு போராட்டம்” என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் #Marina4Kalaignar என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் பரவி செய்தியானது.

இதனிடையே, கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கக் கோரி, தி.மு.க தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், “அண்ணா நினைவிடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன்
இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் ”

என்ற வாசகம் அடங்கிய பேழையில், அண்ணாவின் அருகே ஓய்வுகொண்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.