Arignar-anna - DMK
header_right
Generic placeholder image

அறிஞர் அண்ணா

tab

இளமைப்பருவம்

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், காஞ்சிபுரத்தில் உள்ள எளிமையான நெசவுக் குடும்பம் ஒன்றில் நடராசன் - பங்காரு இணையருக்கு மகனாகப் பிறந்தார் அண்ணா பிறந்தார். அண்ணாவை வளர்த்தவர், அவருக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர் அவரது சிற்றன்னை இராசாமணி அம்மையார்.

தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக்கொண்டது. பத்தாம் வகுப்பு முடித்ததும், ஏழ்மை காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாத அண்ணா, காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து, ஆறு மாதங்கள் பணியாற்றினர்.

கல்லூரிப் படிப்பு

பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும், குடும்ப சூழ்நிலை காரணமாக, காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக ஆறு மாதம் பணியாற்றிய அண்ணா, 1928-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகை பெற்று பி.ஏ படித்தார்.

பின்னர், 1930-ம் ஆண்டு இராணி அம்மையாரை வைதீக முறையில் திருமணம் செய்துகொண்டார்.

இதன் பிறகு 1934-ம் ஆண்டு பி.ஏ ஹானர்ஸ் படித்து எம்.ஏ பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தார் அண்ணா. கல்லூரி நாட்களில் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் படிப்பதை அண்ணா வழக்கமாகக் கொண்டிருந்தார். சென்னை தங்கசாலையில் இருந்த பண்டிட் ஆனந்தம் நூலகம், சென்னை செயின் சேவியர் தெருவில் இருந்த மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகம் ஆகியவற்றில் அண்ணா படிக்காத நூல்களே இல்லை என்று கூறப்படுவதுண்டு..

இண்டர் மீடியட்டில் அண்ணா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைக் கண்ட பச்சையப்பன் கல்லூரித் தலைவர் சின்னத்தம்பி பிள்ளை, அண்ணாவை 'பி.ஏ. ஹானர்ஸ்' வகுப்பில் சேரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், ஏழ்மை காரணமாக தன்னால் படிக்க இயலாது எனவும், வேலை தேட இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அண்ணா. இதையடுத்து, அண்ணாவின் ஹானர்ஸ் படிப்புக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக கல்லூரித் தலைவர் உறுதியளித்ததன் அடிப்படையில் ஹானர்ஸ் படிப்பை முடித்தார் அண்ணா..

tab
 
tab

பெரியாருடன் இனைந்தார்

எம்.ஏ படித்து முடித்ததும், சென்னை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறு மாதம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து விடைபெற்று, பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சி.பாசுதேவ் அவர்களின் நட்பு இதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது. நீதிக்கட்சியின் கொள்கைகளை நன்கு அறிந்து கொள்வதற்கும் ஆழ்ந்து சிந்திப்பதற்கும் சிறப்பான வாய்ப்பை அளித்தது. பொப்பிலி அரசர் ஆட்சிக் காலத்தில் நீதிக்கட்சியுடன் அண்ணாவுக்கு நேரடித் தொடார்பு ஏற்பட்டது. இதேபோல், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடுகளும் அண்ணாவை வெகுவாக ஈடுபாடு கொள்ளச் செய்திருந்தன. 1935-ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதன் முதலாக பெரியாரைச் சந்தித்தார் அண்ணா. “எம்.ஏ படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறாயா?” எனக்கேட்ட பெரியாரிடம், “இல்லை, பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம்” என்றார் அண்ணா. பெரியாருக்கு இதுபோன்ற கொள்கையுடய இளைஞர் தேவை என்பதால், அன்று முதல் அவரது தளபதியானார் அண்ணா.

தேர்தலில் போட்டி

பின்னர், 1935-ம் ஆண்டு நீதிக்கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் பெத்துநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டார். மிகவும் எளிமையான உடையணிந்த, குட்டை உருவம் கொண்ட அண்ணா போட்டியிடுவதில், பட்டுடை அணிந்து ஆடம்பரமாய் வாழ்ந்த நீதிக்கட்சியினர் சிலருக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் அண்ணாவை எதிர்த்தனர். ஆனால், செட்டிநாட்டு இளவரசர் திரு.எம்.ஏ.முத்தையா செட்டியார் அண்ணாவின் அறிவாற்றல், நேர்மை பற்றி அறிந்தவர் என்பதால், அவர் அண்ணாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார். “அண்ணாதுரையின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர் தேர்தலில் நிற்பதற்குப் பணம் இல்லாததுதான் தடை என்றால், அந்தப் பணத்தை நான் கொடுத்து, நம்மைப்போல் அவரையும் பணக்காரராக்கி, அந்தத் தடையைத் தகர்க்கத் தயாராக இருக்கிறேன்” என்று முழங்கினார்.

அப்போது, காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ் கட்சி விரைவாக வளர்ந்துகொண்டிருந்த காலம். தமிழ்த் தென்றல் திரு.வி.க., இராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோரெல்லாம் அண்ணாவை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மா.சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் முடிவு அண்ணாவுக்குச் சாதகமாக இல்லை. அந்தத் தோல்வி நீதிக்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியே தவிர, தனிப்பட்ட அண்ணாவுக்கு அல்ல.

tab

தமிழுக்காக சிறை சென்றார்

அறிஞர் அண்ணாவை அரசியல் களத்தில் முழுக்க முழுக்க இழுத்துவிட்ட பெருமை இராஜாஜி அவர்களையே சாரும். சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றிருந்த இராஜாஜி, 1937-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தியதுதான் இதற்குக் காரணம். இந்தித் திணிப்பை எதிர்த்து, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சார்பில் காஞ்சி மாநகரில் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் பெரும்படையின் தளபதியாய் விளங்கிய அண்ணா தலைமையில், எண்ணற்ற இளைஞர்கள் பொழிப்போரில் இறங்கினர். பெரியாருடன் பிணக்குற்று சிறிது காலம் விலகியிருந்த நீதிக்கட்சியும் மொழிப் போரில் ஈடுபட்டது. பெரியாரை, தங்கள் கட்சியின் தலைவராகவும் நியமித்தது. இப்போராட்டத்தில், பெரியார், அண்ணா உட்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறைக்குச் செல்வது குறித்து, “குற்றாலத்துக்கோ, கொடைக்கானலுக்கோ செல்பவர்கள் அங்கே தனக்கு வேண்டியவர்கள் இருப்பது கண்டால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்?

நான் உள்ளே நுழைந்ததும், வந்துவிட்டாயா. வா, வா. ஆறா, எட்டா, நாலா, மூன்றா?” என்று கேட்டபடி நண்பர்கள் என்னிடம் அன்புடன் வந்தபோது, எனக்கு அத்தகைய மகிழ்ச்சி ஏற்பட்டது.பெரியாருடன் ஒன்றாக இருக்க, பேச, கேட்க, பழக அருமையான வாய்ப்பு, இரசமான விருந்து, சுவையுள்ள காலமாக அந்த மாதங்கள் கழிந்தன” என்று மகிழ்ந்து கூறியிருக்கிறார் அண்ணா.

திராவிட நாடு முழக்கம்

தமிழ் மொழியைக் காப்பதற்காக எழுந்த முதல் போராட்டம், வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயர் முயற்சியால் தோன்றிய நீதிக்கட்சியையும், வெண்தாடி வேந்தர் பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தையும் ஒரேகூட்டில் இணைத்தது. 1938-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெரியார் சிறையில் இருந்தபோது சென்னையில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் தலைவராக பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு, ‘தமிழ்நாடு தமிழருக்கு’ என்ற கருத்து வலுப்பெற தொடங்கியது. 1939-ம் ஆண்டு, விடுதலை நாளேட்டின் துணை ஆசிரியர் பொறுப்பேற்றார் அண்ணா.

இந்நிலையில், 1940-ம் ஆண்டு ஃபிப்ரவரி 24-ம் நாள் திருவாரூரில் நீதிக்கட்சியின் மாநில மாநாடு கூடிற்று. அப்போது சென்னை மாநிலம் தமிழர்கள் மட்டும் வாழும் பகுதியாக இருக்கவில்லை. பெரும்பகுதி ஆந்திர நாடும், கன்னடர்கள் வாழும் சில பகுதிகளும், மலையாளிகள் வாழும் சில பகுதிகளின் அங்கமாய்த் திகழ்ந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளர் மற்றும் துளு முதலான மொழிகள் யாவும் தொன்மைத் தமிழான திராவிட மொழியொன்றிலிருந்து தோன்றியவை என்பதும், இம்மொழிகளைப் பேசுவோர் அனைவரும் ‘திராவிடர்’ என்னும் ஓரின மக்களே என்பதும் சர்.ஜான் மார்ஷல் மற்றும் கால்டுவெல் போன்ற பேரறிஞர்களின் ஆய்வு முடிவுகளாகும்.

எனவே, நான்கைந்து மொழிக்காரர்களும் தனித்தனியே பிரிந்து நின்று போராடுவதைக் காட்டிலும் இணைந்து நிற்பது கூடுதல் நன்மை பயக்கும் என்பதால், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்னும் இலட்சிய நோக்கம் பிறந்தது. திருவாரூர் மாநாட்டில் இதை முன்மொழிந்தவர் சண்டே அப்சர்வர் ஆசிரியர் பாலசுப்பிரமணியம். வழிமொழிந்தவர்கள், சி.பாசுதேவ், அறிஞர் அண்ணா. இதன் பிறகு, பெரியாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் விலகிவிடவே, அந்தப் பொறுப்புக்கு அண்ணா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1942-ம் ஆண்டு ‘திராவிட நாடு’ வார இதழைத் தொடங்கினார் அண்ணா.

tab

திராவிடர் கழகம்

1944-ம் அண்டு சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில், பெரியாரின் பொதுவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க பகட்டான தலைவர்கள் சிலர் முற்பட்டனர். ‘பட்டம் பதவிகள் பெற்றவர்களும் படித்தவர்களும் நிறைந்த நீதிக்கட்சிக்கு படிப்பறிவு இல்லாம பெரியார் தலைவராக இருப்பதா?’ என்ற பொறாமை அவர்களுக்கு.

இதற்கு பதிலடியாய், “பெரியார் படிக்காதவராக இருக்கலாம். ஆனால், படித்தவர்களைவிட மேலோங்கி நிற்கவல்ல நுண்மான நுழைபுலமும், வாதத் திறனும் படைத்த பகுத்தறிவுச் சிற்பி…” என்றெல்லாம் எடுத்துரைத்து எதிரிகளின் வாயை மூடச்செய்தார் அண்ணா.

மேலும், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் முகமாக, பெரியார் அவர்களை மாநாட்டுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அண்ணா அவர்கள், கீழ்க்கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களைக் கொண்டுவந்தார்.

 • 1.வெள்ளையர் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ் பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற கவுரவப் பட்டங்களைப் பெற்றவர்கள், அந்தப் பட்டங்களைத் துறக்க வேண்டும். மீண்டும் அவர்களோ, மற்றவர்களோ, அத்தகையப் பட்டங்களை வெள்ளையரிடமிருந்து பெறக்கூடாது.
 • 2. உள்ளாட்சி மன்றத்தில் தலைவர் முதலிய பதவிகள், கவுரவ மாஜிஸ்ட்ரேட், நிர்வாகத் தொடர்பு கொண்ட மற்ற பதவிகளில் இருந்து உடனே விலகிவிட வேண்டும். மீண்டும் அவற்றை பெறுதல் கூடாது.
 • 3.தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரைக் குறிக்கும் பட்டங்களை விட்டொழிக்க வேண்டும். எதிர்காலத்தில் எவரும் பயன்படுத்தக்கூடாது..
 • 4. ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை மாற்றித் ‘திராவிடர் கழகம்’ என்று பெயரிடப்பட வேண்டும்.

பெரியார் அண்ணா கருத்து வேறுபாடு

1947 ஆகஸ்ட் 14-ம் நாள் பாகிஸ்தானும், 15-ம் நாள் இந்தியாவும் விடுதலை பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகேட்டுக் கோபமுற்ற பெரியார், ஆகஸ்ட் 15-ம் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும்படி அறிவித்தார். தற்போது கிடைத்திருப்பது அரசியல் விடுதலை எனவும், சமுதாய விடுதலையே உண்மையான விடுதலை எனவும் கூறிய பெரியார், சமுதாய விடுதலை என்பது பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் சாத்தியமற்றுப் போகும் என்று விளக்கமளித்தார். ஆனால், அண்ணா இதற்கு இணங்கவில்லை.

இதேபோல், இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக விடுதலை நாளிதழ் செயல்பட்டபோது அண்ணா அதில் பணியாற்ற மறுத்துவிட்டார். இந்நிலையில், மிகவும் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு விளங்கியப் பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த செய்தி, கழகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடும் எதிர்ப்பையும் மீறி 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம்நாள், சென்னை தியாகராயநகரில் பெரியார் – மணியம்மையின் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

மேலும், தந்தைப் பெரியார் அவர்களுக்கு தேர்தல் அரசியலில் நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லாமல் இருந்தது. திராவிடர் கழகத்தை அவர் தேர்தலில் பங்கு பெறாத, சமூக நீதி போராட்டங்களை முன்னிறுத்தும் இயக்கமாகவே நடத்தி வந்தார். இதன் காரணமாக, தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் கொள்கைகளை, இலட்சியங்களை, அரசியல் அதிகாரத்தின் வழியே சட்டமாக்கி, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவதென அன்ணா உள்ளிட்டோர் முடிவு செய்தனர்.

tab

தி.மு.க

இதன் எதிரொலியாக, 1949 செப்டம்பர் 17-ம் நாள், குடந்தை கே.கே.நீலமேகம் தலைமையில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழு கூடியது. அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது உருவாக்கப்பட்ட அமைப்புக் குழு, ’திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்படுவதாக செப்டம்பர் 18-ம் நாள் அறிவித்தது.

அன்று மாலை, சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தி.மு.க.வின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அண்ணா, ”திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான். திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை மீதேதான் திராவிட

முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில், மாறுதல் – மோதுதல் எதுவும் கிடையாது” என்று அறிவித்தார்.

மேலும், அரசியலுக்காக தி.மு.கழகம் உருவாக்கப்பட்டாலும், கொள்கை குறிக்கோள் என்ற அடிப்படையில் தி.க., தி.மு.க., இரண்டும் ஒன்றே! அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும், வேறுபாடும் இல்லை! எதிர் தரப்பை வீழ்த்த இரண்டு அமைப்புகளும் இணைந்தும் கலந்தும் செயல்படும் என்று கூறி, இரு அமைப்புகள் என்றாலும் இலக்கு ஒன்றே என்ற கருத்தை தெளிவாக்க தி.க.வும்., தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும். தந்தை பெரியாரின் கொள்கைகளை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி செயல்படுத்தவே தி.மு.க. தொடங்கப்பட்டது என்றார்.

மேலும், “இதையப்பூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியைக் காலியாகவே வைத்திருக்கிறோம்” என்றும் அண்ணா கூறினார்.

தேர்தல் அரசியலில் தி.மு.க

1957-ம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், பொதுத் தேர்தலில் தி.மு.க போட்டியிடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றபட்டது. 1957-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் , சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் தேர்தல் சிறப்பு மாநாட்டில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “இந்திய அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டிய முதல் மாற்றம், எந்தவொரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையைத் தானாகவே பெற்றிருக்க வழி செய்யவேண்டும்.

அதிகாரங்களும் வருவாயும் மத்திய ஆட்சிக்கே பெரிதும் அளிக்கப்படுகின்றன. மாநில ஆட்சியில் வருவாய் பெருக வழியில்லாமல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, மாநிலங்களின் அதிகார வரம்பும், வரிவிதிப்பு உரிமைகளும் வெகுவாக அதிகரிக்கப்பட்டு, மத்திய ஆட்சியின் அதிகாரங்களுக்கும் வரிவிதிப்பு உரிமைகளுக்குமான வரம்பு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அரசு மயமாக்கப்படும் நாள்தான் நாட்டு மக்களின் துயர் துடைக்கும் நாளாக அமையும்.

tab

கல்வி, பல கட்டங்களிலும் தாய்மொழியிலேயே அளிக்கப்பட வேண்டும். இந்தித் திணிப்பு, ஒரு சராரின் அரசியல் ஆதிக்க வெறியையே பிரதிபலிக்கிறது. அதற்கு இடமளிப்பது பெருந்தீமை பயக்கும்.

திராவிட மக்களின் மொழி, கலை, நாகரிகம், வரலாறு ஆகிய துறைகளில் ஆராய்ச்சி நடத்தி, உண்மை நிலையைத் துலக்குவதெற்கென்று தனித் திராவிட ஆராய்ச்சிப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட வேண்டும்” என்பன உள்ளிட்ட முதன்மையான நோக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் முடிவில், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உட்படத் தி.மு.க சார்பில் 15 சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற ஊப்பினர்களும் தேர்வாகியிருந்தனர். காங்கிரசுக்கு அடுத்து பெரிய கட்சியாக கருதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்

முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த தி.மு.க, 1957-ம் ஆண்டு மே 7-ம் நாள், “சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என அழைக்கப்பட வேண்டும்” என்று தனது முதல் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஆனால், ஓட்டெடுப்பின்போது தீர்மானம் வெற்றிபெறவில்லை.

மாநிலக் கட்சியாகத் தி.மு.க.வுக்கு அங்கீகாரம்

1958, மார்ச் 2-ம் நாள், திராவிட முன்னேற்றக் கழகத்தை மாநிலக் கட்சியாக அங்கீகரித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். தேர்தல் சின்னமாக உதயசூரியனை ஒதுக்கியது. இதையடுத்து, 1962-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 50 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க, நாடாளுமன்றத் தேர்தலில் 7 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், வெற்றியைக் கொண்டாட முடியாத வகையில், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோல்வியடைந்திருந்தார். காங்கிரஸ் கட்சி 138 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 1962 மார்ச் 15-ம் நாள் மீண்டும் முதலமைச்சராக இராஜாஜி பொறுப்பேற்றுக்கொண்டார். வெற்றி வாய்ப்பை இழந்திருந்த அண்ணா, தி.மு.க சார்பில் 1962-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

tab

நாடாளுமன்றத்தில் அண்ணாவின் உரை

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அண்ணா, ”நான் திராவிட மரபுவழி வந்தவன். என்னைத் திராவிடன் எனக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள், நான் வங்காளிகளுக்கோ, குஜராத்தியருக்கோ, மராட்டியர் முதலானவர்களுக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் கூறியதுபோல், மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்.

நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்ளும்போது திராவிடனிடம் இந்த நாட்டுக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்டவை இருப்பத்காகக் கருதுகிறேன். நாங்கள் விரும்புவது அனைத்தும் சுயநிர்ணய உரிமையத்தான்.” என்று குறிப்பிட்டார். 1963-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதிய நேரு, “ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிப்பதற்கான சட்ட முன்வரைவு அல்லது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்படும்” என்று எழுதியிருந்தார்.

ஆனால், ஒரு மாதம் கழித்து ஏப்ரம் 13-ம் நாள், ஆட்சிமொழி குறித்த சட்டமுன்வரைவைக் கொண்டுவந்த உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, 1965 ஜனவரி 26-ம் நாள் முதல் இந்தி மொழி மட்டுமே ஆட்சிமொழி என அறிவித்தார்.

இது, இந்தி தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகத் தி.மு.க கருதியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, “விளைவு குறித்து அஞ்சாமல் இந்தியை எதிர்த்துப் போராடுவோம். இந்தியை எதிர்க்கும் போராட்டத்தில் 4 ஆண்டுகள் அல்ல, 40 ஆண்டுகள் ஆனாலும் சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

காங்கிரசை மறையச் செய்த தி.மு.க

கட்டாய இந்தித் திணிப்பு, இந்தியை எதிர்த்தவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு, தி.மு.க ஊடகங்களுக்கு தடை என காட்டாட்சி நடத்திக்கொண்டிருந்த காங்கிரசை, தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துக்கட்டுவதை அண்ணா தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார். இது குறித்து அவர் கழகத்தினருக்கு எழுதிய கடிதத்தில், “என் வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டால், அவனைத் தாக்குவதற்குச் சுதந்திரா தடியென்றோ, கம்யூனிஸ்ட் தடியென்றோ பார்க்கமாட்டேன்.எந்தத் தடியென்றாலும் உபயோகிப்பேன். காங்கிரசை வீழ்த்துவதற்கு மற்ற கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்வது தவறாகாது” எனக் கூறியிருந்தார்.

1967-ம் ஆண்டு நான்காவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், இராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மா.பொ.சி.யின் தமிழரசு கழகம், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தன. அண்ணா, தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது தி.மு.க அமோக வெற்றிப் பெற்றிருந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், திருமங்கலம் தொகுதி வேட்பாளர் மரணமடைந்துவிட்டதால் மீதமுள்ள 233 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 173 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க, 138 இடங்களில் வெறிப் பெற்றது. அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 49 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியைத் தழுவியது. நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சூடியிருந்தது.

 
tab

தமிழக முதல்வராக அண்ணா

இதையடுத்து, கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த அண்ணா, 1967-ம் ஆண்டு மார்ச் 6-ம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றுக்கொள்வதுதான் அதுநாள்வரை நடைமுறையில் இருந்தது. அந்த நடைமுறையை மாற்றியமைத்த அண்ணாவும் அவரது அமைச்சர்களும் ‘உளமாற’உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அண்ணா ராஜிநாமா செய்த தென்சென்னைத் தொகுதியில் முரசொலி மாறன் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

தேர்தல் களத்தில், பெரியாரின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்ணா வெற்றிப் பெற்றிருந்தாலும், அவரது தலைமையில் பதவியேற்ற அரசு, பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாகவே தனது பணிகளைத் தொடங்கியது. தேர்தலில் தி.மு.க வெற்றிப் பெற்றதும், அண்ணா தனது கூட்டணிக் கட்சித் தலைவரான இராஜாஜியை சந்திப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக அவர் திருச்சியில் இருந்த பெரியாரை சென்று சந்தித்தார். 1937-ம் ஆண்டு, நீதிக்கட்சியைத் தோற்கடித்து, திராவிட இயக்க ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியவர் இராஜாஜி. அதே இராஜாஜியை தனது கூட்டணியில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து மீண்டும் திராவிடக் கட்சியான தி.மு.க.வை வெற்றிபெற வைத்ததன் மூலம், திராவிடர்களுக்கும் ராஜதந்திரம் தெரியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அண்ணா – பெரியார் சந்திப்பு அமைந்தது.முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகளையும், தி.மு.க.வின் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கினார்.

வடமொழி ஒழிப்பு

1967-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ’தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்ற மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அரசு முத்திரையில் இடம் பெற்றிருந்த ‘சத்யமேவே ஜெயதே’ என்ற வடமொழி வாக்கியம் நீக்கப்பட்டு, ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் எழுதப்பட்டது.

நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் சரிக்குச் சரி கலந்து பேசும் ‘மணிப்பிரவாள நடை’வழக்கத்தில் இருந்தது. இதுகுறித்து, “தமிழில் ஆரியம் கலந்தது, தமிழகத்துடன் ஆரிய வர்த்தம் ஐக்கியமானது. பிறகு கேட்கவும் வேண்டுமா? பாசறைக்குப் பக்கத்தில் பர்ணசாலைகள், அரண்மனைகளுக்குப் பக்கத்தில் ஆசிரமங்கள், மன்னர்களுக்குப் பக்கத்தில் மடாலய மறையவர்கள்” என்ற நிலை ஏற்பட்டதாகக் கூறி அண்ணா வருத்தப்பட்டார்.

மேலும், தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலக்கவிட்டதல்தானே தனித்தமிழ் சொற்களான தண்ணீர் – ஜலமாகவும், திருவிழா –உற்சவமாகவும், சுவை – ருசியாகவும், துன்பம் - கஷ்டமாகவும், மகிழ்ச்சி – சந்தோஷமாகவும், மலர் – புஷ்பமாகவும், சோறு – சாதமாகவும், சாறு – சாம்பாராகவும், மிளகுநீர் – ரசமாகவும், கறி – பதார்த்தமாகவும், முதுகுன்றம் – விருத்தாசலமாகவும், மறைக்காடு – வேதாரண்யமாகவும் மாறிவிட்டன” என்று அடுக்கிக்கொண்டே போனார். இவ்வாறாக, 20-ம் நூற்றாண்டின் முற்பாதிவரையில் மணிப்பிரவாள நடையால் தமிழ் மொழி பெருமளவு சிதைக்கப்பட்டிருந்தது.

அண்ணா, தன்னுடைய பேச்சாலும் எழுத்தாலும் தனித் தமிழைப் பரப்பியதுடன் தனது தம்பிகளான கழகத்தினரையும் அப்பணியை முதன்மைப் பணியாக மேற்கொள்ளச் செய்தார். இதன் விளைவாக மணிப்பிரவாள நடை மறையத் தொடங்கியது. அக்ராசனர் – தலைவராகவும், காரியதரிசி, செயலராகவும், பொக்கிஷதார் – பொருளாளராகவும், பிரசங்கம் – சொற்பொழிவாகவும், உபன்யாசம் – உரையாகவும், மகாஜனம் – பொதுமக்களாகவும், ராஜ்ஜியம் – அரசாகவும், நமஸ்கரம் – வணக்கமாகவும், கிருஹப் பிரவேச மஹோற்சவ விஞ்ஞாபனம் – புதுமனைப் புகுவிழா அழைப்பிதழாகவும், கல்யாண பத்திரிகை – திருமண அழைப்பிதழாகவும், ஸ்ரீ – திருவாகவும், ஸ்ரீமதி –திருமதியாகவும் மாற்றம் பெற்றுத் தமிழ் மணக்கத் தொடங்கியது.

அண்ணா முதலமைச்சரானதும் ஸத்யமேவ ஜயதே – வாய்மையே வெல்லும் எனவும், மதராஸ் கவர்மெண்ட் – தமிழக அரசு எனவும், செக்ரடேரியட் – தலைமைச் செயலகம் எனவும், சென்னை மாகாணம் – தமிழ்நாடு மாநிலம் எனவும், அசெம்பிளி – சட்டமன்றம் எனவும், ஸ்பீக்கர் – பேரவைத் தலைவர் எனவும், மந்திரி – அமைச்சர் எனவும், கனம் – மாண்புமிகு எனவும், கமிஷனர் – ஆணையர் எனவும், கலெக்டர் – மாவட்ட ஆட்சியர் எனவும் மாற்றம் கண்டன. ஆதிக்கச்சாதியினரை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் சந்திக்கும்போது ‘கும்பிடுறேன் சாமி!’ எனவும், ஆதிக்கச்சாதியினரும் பார்ப்பனர்களும் சந்தித்துக்கொள்ளும் போது ‘நமஸ்காரம்!’ என கூறிக்கொண்டதற்கு பதிலாக, திராவிட இயக்கத்தினரின் இந்த முயற்சியால் ‘வணக்கம்’ என்ற ஏற்றத்தாழ்வற்ற புரட்சிகர சொல் புழக்கத்துக்கு வந்ததே சமூகத்திலும் சமூக அரசியலிலும் திராவிட இயக்கத்தின் இன்றியமையாத பங்களிப்பை உணர்த்துவதாகும்.

1967, ஏப்ரல் 22-ம் நாள், சென்னை மாநகராட்சி தொகுதிக்கெனத் தமிழ்நாடு சட்ட மேலவையில் காலியாக இருந்த இடத்துக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அண்ணா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டத்தில் இருந்து எந்தெந்த நோக்கங்களுக்காகவும், கொள்கைகளுக்காகவும் போராடியதோ அவற்றுக்கெல்லாம் தனது ஆட்சிக் காலத்தில் தீர்வுகாண விரும்பினார் அண்ணா. தேர்தல் நேரத்தின்போது, ரூபாய்க்கு 1 படி அரிசி தருவதாக அவர் வாக்களித்திருந்தார். ‘3 படி லட்சியம், 1 படி நிச்சயம்’ என்பதுதான் அந்த வாக்கு. அது வெறும் வாய்மொழி வாக்குதானே தவிர, தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறவில்லை. எனினும், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டார் அண்ணா. முதற்கட்டமாகச் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் படி அரிசித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களுக்கு அதை விரிவுபடுத்த நிதிநிலை இடம் கொடுக்கவில்லை. மேலும், கோதுமைக்கு மானியம் அளிக்கத் தயாராக இருந்த மத்திய அரசு, அரிசிக்கு மானியம் வழங்க மறுத்துவிட்டதும் படியரிசித் திட்டம் முடங்குவதற்குக் காரணமாக அமைந்தது.

‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம்

1967 ஜூலை 18-ம் நாள், அதுநாள்வரை மெட்ராஸ் ஸ்டேட் என்றும் சென்னை மாகாணம்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தை, ‘தமிழ்நாடு’என்று பெயர் மாற்றம் செய்வதாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு இந்திய அரசியல் சட்டத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது.

சுயமரியாதைத் திருமணச் சட்டம்

காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், தமிழனுக்குச் சுயமரியாதை வேண்டும் என்று பாடுபட்டார். அந்தக் காலத்தில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணங்கள் நடைபெறும். அவர்கள் சமஸ்கிருத மந்திரங்களை ஓதித் திருமணங்களை நடத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையில், பார்ப்பனர் ஆதிக்கம், சமஸ்கிருதம் இரண்டையும் ஒழிக்க ஒரேவழி, சுயமரியாதைத் திருமணம்தான் என்று முடிவு செய்தார் தந்தை பெரியார். அவர் தொடங்கி வைத்த சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டப்படி அங்கீகாரம் தரப்படவில்லை. அதைச் சட்டப்பூர்வமாக்கினார் அறிஞர் அண்ணா. ‘சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றித் தீர்மானம் நிறைவேற்றிய அதே நாளில், இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) சட்டமுன்வரைவைக் கொண்டுவந்து அதனைச் சட்டமாகவும் நிறைவேற்றினார்.

tab

இன்று, தாலி அணியாமல், வேத மந்திரங்கள் ஓதாமல் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிச் செய்துகொள்ளும் திருமணங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை என்பதற்கு அண்ணா கொண்டுவந்த சட்டமே காரணம். சுயமரியாதை திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய அண்ணா, ”இந்த ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை” என்றும் நெகிழ்ந்தார்.

பேருந்துகள் நாட்டுடமையாக்கம்

அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் கலைஞர். அப்போதெல்லாம் தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம்தான் இருந்தது. இந்த நிலையை மாற்றி, நாட்டிலேயே முதன்முறையாகத் தி.மு.க ஆட்சிக் காலத்தில் பேருந்துகள் நாட்டுடமையாக்கப்பட்டன.

கல்வியில் தமிழுக்கு முதலிடம்

1967-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் படித்த பாடங்களை முதல் பிரிவு ஆங்கிலம் என்றும், இரண்டாம் பிரிவு தமிழ் என்றும், மூன்றாம் பிரிவு பிற பாடங்கள் என்றும் வகைப்படுத்தியிருந்தனர். தமிழ் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதை மாற்றவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற முதலமைச்சர் அண்ணா, முதல் பிரிவு தமிழ் எனவும், இரண்டாம் பிரிவு ஆங்கிலம் எனவும், மூன்றாம் பிரிவு பிற பாடங்கள் எனவும் 1968-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். இவ்வாறு, தி.மு.க ஆட்சியில்தான் பாடத்திட்டத்தில் தமிழுக்கு முதலிடம் தரப்பட்டது.

தமிழறிஞர்களுக்குச் சிலைகள்

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 1968-ம் ஆண்டு ஜனவரி மாதம், இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு ‘திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன் ஆகிய தமிழறிஞர்கள் மற்றும் கண்ணகி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் முழு உருவ சிலைகள் சென்னை கடற்கரையில் நிறுவப்பட்டன. சென்னை, மதுரை, அண்ணாமலை ஆகிய பல்கலைக் கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி நடத்துவதற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது.

இருமொழிக் கொள்கை

“தமிழைப் பாடமொழியாக்க வேண்டும் எனக் கூறுவது இந்த நாட்டில்தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலம்தான் பாடமொழி எனக் கூறவேண்டிய தேவை எழவில்லை. எந்த நாட்டிலும் இல்லாத விந்தை, இந்த நாட்டில்தான் இருக்கிறது” என்று வேதனைப்பட்ட அண்ணா, தமிழைப் பயிற்றுமொழியாக்குவது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.

“இந்தி பேசாத மக்கள் மீது அம்மொழி திணிக்கப்படமாட்டாது என்று நேரு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற நடுவண் அரசு தயக்கம் காட்டி வந்ததால் 1967 நவம்பர் மாதம் முதல் தமிழ்நாட்டில் மாணவர்கள் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா, மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்கள் விருப்பப்படியே 1968 ஜனவரி 23-ம் நாள் தமிழகச் சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டித் ”தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை”என்று அறிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மட்டும் கற்பிக்கப்படும் என்று இருமொழிக் கொள்கையை அறிவித்து நடைமுறைபடுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி உட்பட, அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அதிக அளவில் மாணவர்கள் தமிழ் வகுப்பிலே சேர்ந்திருக்கிறார்கள்” என்று அண்ணா கூறியபோது, “அவர்களைக் கல்லூரி முதல்வர்கள் மிரட்டிக் கட்டாயப்படுத்தித் தமிழ் வகுப்பிலே சேர்த்துவிட்டார்கள்” என்று காங்கிரஸ் உறுப்பினர் விநாயகம் குற்றம்சாட்டினார். இதற்கு அண்ணா, “விநாயகம் குற்றச்சாட்டு எனக் கருதிக்கொண்டு இதைக் கூறினார். ஆனால், அதே முறையை எல்லா முதல்வர்களும் கையாளவில்லையே என்று நான் வருத்தப்படுகிறேன்” என்று பதிலளித்தார். தமிழைப் பயிற்று மொழியாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமெனில், கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தயங்கக்கூடாது என்று அண்ணா கருதினார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

 
tab

எழுத்துப் பணி

1931-ம் ஆண்டு, ‘தமிழரசு’ இதழில் ‘பெண்கள் சமத்துவம்’ என்ற தலைப்பில் முதன்முதலாகக் கட்டுரை எழுதினார் அண்ணா. அண்ணா அவர்களின் முதல் சிறுகதையான `கொக்கரக்கோ`, 1934-ம் ஆண்டு ஆனந்த விகடனில் இதழில் வெளியானது. 1936-ம் ஆண்டு `பாலபாரதி` என்ற இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றினார். அண்ணா அவர்களின் முதற்கவிதை `காங்கிரசு ஊழல்` என்ற தலைப்பில் 1937-ம் ஆண்டு ‘விடுதலை’ ஏட்டில் வெளியானது. 1937-ம் ஆண்டு, `நவயுகம்`, `விடுதலை`, `குடியரசு` ஆகிய இதழ்களுக்குத் துணை ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றினார்.

1938-ம் ஆண்டு முதல் ‘பரதன்’ என்ற பெயரில் பல்வேறு தலைவர்களுக்கு விடுதலை ஏடு வாயிலாக பகிரங்கக் கடிதங்கள் எழுதி வெளியிட்டார். 1939-ம் ஆண்டு, அண்ணாவின் முதல் குறும் புதினமான `கோமளத்தின் கோபம்` குடி அரசு இதழில் வெளியானது. 1940-ம் ஆண்டு, `வீங்கிய உதடு` என்கிர முதல் புதினம் குடி அரசு இதழில் வெளியானது. 1942ஆம் ஆண்டில் திராவிடநாடு இதழ் தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்டபோது, தமது தரப்பு வாதங்களைகக் கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் 1949-ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றினார். 1953-ம் ஆண்டு, நம்நாடு ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார். 1957-ம் ஆண்டு, தனது கருத்துகள் உலகமெங்கும் பரவ வேண்டும் என்பதற்காக Home Rule என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார்.

திரைப்படம்

 • நல்ல தம்பி (1949) - திரைக்கதை, உரையாடல்
 • வேலைக்காரி (1949) - திரைக்கதை, உரையாடல்
 • ஓர் இரவு (1951) - கதை
 • சொர்க்கவாசல் (1954) - திரைக்கதை, உரையாடல்
 • சந்தோசம் (1955) - திரைக்கதை, உரையாடல்
 • ரங்கோன் ராதா (1956) - கதை
 • தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) - கதை
 • நல்லவன் வாழ்வான் (1961) - திரைக்கதை, உரையாடல்
 • எதையும் தாங்கும் இதயம் (1962) - திரைக்கதை, உரையாடல்
tab

நாவல்கள்

1  என் வாழ்வு  1940  குடியரசு
2  கலிங்கராணி  1943  திராவிடநாடு
3  பார்வதி பி.ஏ.  1945  திராவிடநாடு
4  தசாவதாரம்  1945  திராவிடநாடு
5  ரங்கோன் ராதா  1947  திராவிடநாடு

குறுநாவல்கள்

1  கபோதிபுரத்துக் காதல்  1939  விடுதலை
2  கோமளத்தின் கோபம்  1939  குடியரசு
3  சிங்களச் சீமாட்டி  1939  குடியரசு
4  குமாஸ்தாவின் பெண்  1942  திராவிடநாடு
5  குமரிக்கோட்டம்  1946  திராவிடநாடு
6  பிடிசாம்பல்  1947  திராவிடநாடு
7  மக்கள் தீர்ப்பு  1950  திராவிடநாடு
8  திருமலை கண்ட திவ்யஜோதி  1952  திராவிடநாடு
9  தஞ்சை வீழ்ச்சி  1953  திராவிடநாடு
10  பவழ பஸ்பம்  1954  திராவிடநாடு
11  எட்டு நாட்கள்  1955  திராவிடநாடு
12  உடன்பிறந்தார் இருவர்  1955  திராவிடநாடு
13  மக்கள் கரமும் மன்னன் சிரமும்  1955  திராவிடநாடு
14  அரசாண்ட ஆண்டி  1955  திராவிடநாடு
15  சந்திரோதயம்  1955  திராவிடநாடு
16  புதிய பொலிவு  1956  திராவிடநாடு
17  ஒளியூரில் ஓமகுண்டம்  1956  திராவிடநாடு
18  கடைசிக் களவு  1956  திராவிடநாடு
19  தஇதயம் இரும்பானால்  1956  திராவிடநாடு
20  இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்  1963  திராவிடநாடு
21  தழும்புகள்  1965  காஞ்சி
22  வண்டிக்காரன் மகன்  1966  காஞ்சி
23  இரும்பு முள்வேலி  1966  காஞ்சி
24  அப்போதே சொன்னேன்  1968  காஞ்சி

இவை தவிர, பல்வேறு தலைப்புகளில் ஏறக்குறைய 1,500 கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

 
tab

மறைவு

இதன் பிறகு, திடீரென அண்ணாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 1968 செப்டம்பர் 10-ம் நாள் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணா, மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு 1969-ம் ஆண்டு ஃபிப்ரவரி 3-ம் நாள் இயற்கை எய்தினார். உலக வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சோப லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது..

tab
tab